டிக்கெட் கட்டணத்தை குறைக்கக்கோரி மலைரெயிலை மறிக்க முயற்சி
குன்னூரில் டிக்கெட் கட்டணத்தை குறைக்கக்கோரி மலைரெயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்
குன்னூரில் டிக்கெட் கட்டணத்தை குறைக்கக்கோரி மலைரெயிலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டணம் உயர்வு
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. அதில் குன்னூர்-ஊட்டி இடையே தினமும் 4 முறை மலைரெயில் இயக்கப்படுகிறது. காலை 7.45 மணிக்கு புறப்படும் மலைரெயிலில் குன்னூர் முதல் லவ்டேல் வரை உள்ள ரெயில் நிலையங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அதிகளவில் பயணம் செய்வது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குன்னூர்-ஊட்டி இடையே பயணிக்க நபர் ஒருவருக்கு முதல் வகுப்பு ரூ.75, 2-ம் வகுப்பு ரூ.10 என டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது நபர் ஒருவருக்கு முதல் வகுப்பு ரூ.350, 2-ம் வகுப்பு ரூ.190 என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் பெற வேண்டி இருக்கிறது.
மறியல் போராட்டம்
இந்த கட்டண உயர்வால் உள்ளூர் மக்கள் மலைரெயிலில் பயணம் செய்வதை கைவிட்டு உள்ளனர். 240 இருக்கைகள் கொண்ட பெட்டிகளில் 10 பேர் மட்டுமே பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில்வே நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் குன்னூரில் நேற்று மலைரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்தனர். இதையொட்டி குன்னூர் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
15 பேர் கைது
இதையடுத்து அங்கு திரண்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டிக்கெட் கட்டணத்தை குறைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊட்டியில் இருந்து குன்னூர் வந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைரெயிலை மறிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே மலைரெயில் மறியலை மறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.