2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Update: 2021-10-22 10:46 GMT
திருப்பூர், அக்.23-
திருப்பூரில் செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
செல்போன் பறிப்பு
திருப்பூரை அடுத்த சோளிபாளையம் ரோடு பாரதிநகரில் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து கொலைமிரட்டல் விடுத்த வழக்கில் திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம் ராதாநகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் 23, கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரத்தை சேர்ந்த கபில்குமார்21 ஆகிய 2 பேரை 15 வேலம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஜயகுமார் மீது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு செல்போன் பறிப்பு வழக்கும், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் இரண்டு செல்போன் பறிப்பு வழக்குகளும் உள்ளன. கபில்குமார் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு கூட்டு கொள்ளை முயற்சி வழக்கும், 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 செல்போன் பறிப்பு வழக்குகளும் உள்ளன.
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
இவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செல்போன் வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
கோவை மத்திய சிறையில் உள்ள விஜயகுமார், கபில்குமார் ஆகிய 2 பேரிடம் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 48 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்