சிறையில் மகனுடன் ஷாருக்கான் உருக்கமான சந்திப்பு
சொகுசு கப்பலில் போதை விருந்து வழக்கில் கைதான மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக்கான் ஜெயிலில் சந்தித்து பேசினார். இந்தநிலையில் திடீரென ஷாருக்கானின் வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை, அக்.
சொகுசு கப்பலில் போதை விருந்து வழக்கில் கைதான மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக்கான் ஜெயிலில் சந்தித்து பேசினார். இந்தநிலையில் திடீரென ஷாருக்கானின் வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்யன்கான் கைது
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க நேற்று முன்தினம் மும்பை சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 26-ந் தேதி நடக்க உள்ளது. தற்போது ஆர்யன்கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஷாருக்கான் சந்தித்தார்
இந்தநிலையில் ஆர்யன்கானை நேற்று நடிகர் ஷாருக்கான் ஜெயிலில் சந்தித்து பேசினார். மகனை பார்க்க காலை 9 மணியளவில் ஷாருக்கான் மும்பை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஆர்தா் ரோடு ஜெயிலுக்கு வந்தார். அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சிறை அதிகாரிகள் சோதித்தனர். இதையடுத்து மகனை பார்க்க அவருக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் சிறையில் மகனை சந்தித்து பேசினார். அப்போது ஷாருக்கானுக்கும், ஆர்யன் கானுக்கும் இடையே கண்ணாடி தடுப்பு இருந்தது. இன்டர்காம் போன் மூலமாகவே 2 பேரும் பேசி கொண்டனர். ஷாருக்கான், ஆர்யன் கானுடன் பேசும் போது அருகில் பாதுகாப்பு பணியில் 4 போலீசார் இருந்தனர்.
உருக்கம்
தந்தை-மகன் இருவரும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை கண்ணீர் ததும்ப உருக்கமாக பேசி கொண்டனர். இந்த சந்திப்பு முடிந்து காலை 9.35 மணியளவில் ஷாருக்கான் ஜெயிலில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் ஜெயில் விதிகளின்படி தான் ஷாருக்கான், மகன் ஆர்யன் கானை சந்தித்து பேசியதாக அதிகாரி ஒருவர் கூறினார். நேற்று முதல் சிறை கைதிகளை நேரடியாக சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான் ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுடன் வீடியோ கால் மூலம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு வந்த அதிகாரிகள்
இநதநிலையில் மதிய வேளையில் மும்பை பாந்திராவில் உள்ள ஷாருக்கான் வீட்டுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென வந்தனர். அவர்கள் சோதனை போட வந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது சோதனை அல்ல, வழக்கிற்கு தேவையான குறிப்பிட்ட ஆதாரத்தை சேகரித்து செல்ல வந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மகனை சிறையில் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கான் வீட்டுக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற காவலை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
------------