பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பொன்னேரி பேரூராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலை அருகே பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

Update: 2021-10-22 00:03 GMT
கல்வெட்டு கண்டு பிடிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில், அகத்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு வரலாற்று சின்னங்கள் உள்ள நிலையில் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து வாணிபத்தை பெருக்கியதோடு அவர்கள் பழவேற்காடு கடல் வழியாக பொன்னேரி, ஆரணி உள்பட பல்வேறு இடங்களில் நெசவுத்தொழில் செய்து வந்தனர்.

மேலும் பல்வேறு கட்டிடங்களை உருவாக்கினர். இதற்கு ஆதாரமாக பொன்னேரி தாசில்தார் அலுவலகம் விளங்கி வருகிறது. தற்போது இந்த பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக்காக பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வளத் துறையின் ஆரணியாறு உப நிலவடி கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டிய போது பழங்கால எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

அது எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்பது தெரியவில்லை. மேலும் இந்த கல்வெட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி கிராமம் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிராமங்கள் பூமியில் புதையுண்டு இருக்கலாம். இதனை கண்டறிய தொல்லியல் துறையும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்