ஈரோட்டில் பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தொட்டது
ஈரோட்டில், பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தொட்டது.
ஈரோடு
ஈரோட்டில், பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தொட்டது.
பெட்ரோல் விலை ரூ.103.99
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3 விலை குறைத்ததன் காரணமாக ரூ.100-க்கு கீழ் சென்றது.
இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத்தொடங்கியது. அதன்படி தினமும் 10 காசுகள் முதல் 30 காசுகள் வரை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 69 காசுக்கு விற்பனையானது. ஆனால் நேற்று மேலும் 30 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 99 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
டீசல் விலை ரூ.99.99
இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 66 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 33 காசுகள் விலை உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 99 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோல் விலை 104 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே காய்கறிகள், மளிகை பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.