இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் பட்டுவாடா; காங்கிரஸ் குற்றச்சாட்டு

இரு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் என வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

Update: 2021-10-21 21:17 GMT
பெங்களூரு: இரு தொகுதி இடைத்தேர்தலில்  ஆளும் பா.ஜனதா ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் என வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக  காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

பா.ஜனதாவுக்கு பின்னடைவு

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் நடக்கிறது. பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக ஆன பிறகு முதல் முறையாக சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. அதனால் இந்த தேர்தல் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது அவரது தலைமைக்கான அக்னி பரீட்சையாகவும் பார்க்கப்படுகிறது.

அதனால் இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முழு மூச்சாக பசவராஜ் பொம்மை பணியாற்றி வருகிறார். ஒருவேளை பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டால், அது பசவராஜ் பொம்மையின் தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். அதனால் இந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளையும் கைப்பற்றி தனது தலைமையை பலப்படுத்தி கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.2,000

இடைத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா அவ்வளவு சுலபமாக வெற்றி பெற முடியாது என்று ஏற்கனவே ஆய்வு ஒன்றில் கூறப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த மந்திரிசபையும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

இடைத்தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கொளுத்தும் வெயிலையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இடைத்தேர்தல் களத்தில் ஆளும் பா.ஜனதா வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.2,000 பட்டுவாடா செய்யப்படுகிறது. அங்கு பண மழை கொட்டப்படுகிறது. எதன் அடிப்படையில் அவர்கள் வாக்கு கேட்க முடியும். பணத்தை தவிர அவர்களால் வேறு எந்த வழியிலும் ஓட்டுகளை பெற முடியாது" என்றார்.

சாக்கு பைகளில் பணம்

அதே போல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், நேற்று ஹனகல் தொகுதியில் பிரசாரம் செய்தபோது அவர் பேசுகையில், "பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.2,000 பட்டுவாடா செய்கிறது. 2 தொகுதிகளிலும் பா.ஜனதா தோற்கும் என்று உளவுத்துறை மூலம் முதல்-மந்திரிக்கு அறிக்கை வந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் அனைத்து மந்திரிகளும் சாக்கு பைகளில் பணத்தை எடுத்து சென்று, அருகில் உள்ள தொகுதிகளில் இருந்து பணத்தை பட்டுவாடா செய்து வருகிறார்கள்" என்றார்.

பா.ஜனதா ஓட்டுக்கு பணம் வழங்குவதாக கூறியுள்ள காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஹாவேரியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "மக்களின் நம்பிக்கை, அன்பை பெற நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். இது தான் எங்கள் கட்சியின் பலம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது குந்துகோல், குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.கே.சிவக்குமார் ஓட்டுக்கு பணம் வழங்கினார். அவரது இந்த அனுபவத்தை நாங்கள் பாா்த்துள்ளோம். ஆனால் தற்போது அத்தகைய குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்துகிறார். நாங்கள் ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை" என்றார்.
இந்த இடைத்தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும், பா.ஜனதா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்