பெண் கொலையில் சிறுவன் கைது

பெங்களூருவில் பெண் கொலையில் சிறுவன் கைது செய்யப்பட்டான். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-10-21 21:17 GMT
பெங்களூரு: பெங்களூருவில் பெண் கொலையில் சிறுவன் கைது செய்யப்பட்டான். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெண் கொலை

பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாரூப் நகர் 10-வது கிராசில் வசித்து வருபவர் லாலுகான். இவரது மனைவி அப்ரீனா கானம் (வயது 28). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி காலை லாலுகான் வேலைக்கு சென்று விட்டார். 2 குழந்தைகளும் தாத்தா வீட்டிற்கு சென்று இருந்தனர். இதனால் அப்ரீனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அப்ரீனா வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை கத்திரிகோலால் குத்திக்கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைக்க அவர் அணிந்திருந்த ஆடையில் தீ வைத்துவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுவனிடம் விசாரணை

லாலுகானை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அப்ரீனாவுக்கும், அவரது உறவுக்கார 17 வயது சிறுவனுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக தங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அப்ரீனாவை தான் கொலை செய்யவில்லை என்றும், கொலை நடந்த நேரத்தில் தான் வேலையில் இருந்ததாகவும் லாலுகான் கூறி இருந்தார்.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்த 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கள்ளக்காதல்

அதாவது அப்ரீனாவும், அந்த சிறுவனும் உறவினர்கள் ஆவார்கள். 17 வயது சிறுவன் கல்லூரி ஒன்றில் படித்து வந்து உள்ளான். இந்த நிலையில் அப்ரீனாவுக்கும், அந்த சிறுவனுக்கும் பழக்கம் உண்டானது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். மேலும் வீடியோ கால் அழைப்பிலும் அடிக்கடி பேசி வந்து உள்ளனர். 

இதுபற்றி அறிந்த லாலுகான், அப்ரீனாவிடம் தகராறு செய்து உள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் கள்ளக்காதலை கைவிட அப்ரீனா மறுத்து விட்டார். மேலும் தனது கணவரை பிரிந்து அந்த சிறுவனுடன் செல்லவும் அப்ரீனா முடிவு செய்து உள்ளாா்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக அப்ரீனாவுக்கும், லாலுகானுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் குழந்தைகளை அழைத்து கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு லாலுகான் வேலைக்கு சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அப்ரீனா வீட்டிற்கு சிறுவன் சென்று உள்ளான். அப்போது சிறுவனிடம் எனது கணவரை பிரிந்து உன்னுடன் வருகிறேன். நாம் 2 பேரும் எங்காவது சென்று விடுவோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் மறுத்து விட்டதாக தெரிகிறது.

கைது

இதனால் ஆத்திரம் அடைந்த அப்ரீனா கத்திரிகோலை எடுத்து சிறுவனை குத்த முயன்று உள்ளார். இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுவன் அந்த கத்திரிகோலை பறித்து அப்ரீனாவை சரமாரியாக குத்தி உள்ளான். இதில் அப்ரீனா இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அப்ரீனா ஆடையில் தீ வைத்து உள்ளான்.

அதாவது அப்ரீனா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை நம்ப வைக்க அவன் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைதான சிறுவன் மீது பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்