விருதுநகர் ரெயில் நிலையத்தில் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள்
விருதுநகர் ரெயில் நிலையத்தில் தவித்த வெளிமாநில தொழிலாளர்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் ரெயில் நிலையத்தில் தவித்த வெளிமாநில தொழிலாளர்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைக்கு சேர்ந்தனர்
விருதுநகர் அருகே சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு ஆலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 25 பேர் இம்மாத தொடக்கத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமும் இலவச உணவு மற்றும் தங்குமிடமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து போதிய உணவு வழங்கப்படாததால் பாதிப்படைந்த நிலையில் தங்கள் மாநிலத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் உறவினர்கள் அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கூறியதன்பேரில் அந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 தொழிலாளர்கள்
இதைத்தொடர்ந்து அந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் உள்பட 3 பேர் விருதுநகர் வந்து இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குள் இதுபற்றி தகவல் அறிந்த அந்த ஆலை நிர்வாகத்தினர் அவர்கள் 25 பேரையும் விருதுநகர் ெரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்று விட்டனர்.
அவர்களுக்கு எவ்வித பண உதவியும் வழங்கவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் நாராயணசாமி அங்கு வந்து பார்த்தபோது 25 பேரில், மூன்று பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரியவந்தது. எனவே இதுபற்றி தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை பணிக்கு சேர்த்து விட்டு அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் ெரயில் நிலையத்தில் விட்டுவிட்டுச் சென்றது, ெரயில் நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.