புதுச்சேரியில் 7 நாய்களை விஷம் வைத்து கொன்ற ஆசாமிகள்
புதுச்சேரியில் பெட்ரோல் திருட்டுக்கு தடையாக இருந்த 7 நாய்களை இறைச்சியில் விஷம் வைத்து கொன்றதாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
புதுச்சேரி, அக்.
புதுச்சேரியில் பெட்ரோல் திருட்டுக்கு தடையாக இருந்த 7 நாய்களை இறைச்சியில் விஷம் வைத்து கொன்றதாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தெரு நாய்கள்
புதுவை 45 அடி சாலையில் சுதந்திர பொன்விழா நகர் உள்ளது. இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிந்தன. அவை குடியிருப்பு வாசிகள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்தன.
இந்தநிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் 7 தெரு நாய்கள் வாயில் நுரை தள்ளியபடி ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நாய்களின் உடல்களை ஆய்வு செய்தனர்.
இறைச்சியில் விஷம்
பின்னர் அங்கு சோதனை செய்தது, ஆங்காங்கே மாட்டு இறைச்சி கிடந்தது. அதனை ஆய்வு செய்தபோது, இறைச்சியில் விஷம் தடவி இருப்பது தெரியவந்தது. மாட்டு இறைச்சியில் விஷம் வைத்து நாய்களை கொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விஷம் வைத்து கொல்லப்பட்ட 7 நாய்களும் கால்நடை டாக்டர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.
2 பேரை பிடித்து விசாரணை
இதுகுறித்து விலங்குகள் நல அமைப்பினர் கொடுத்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விலங்குவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் பெட்ரோல் திருடி வந்துள்ளனர். அப்போது தெருநாய்கள் குரைத்ததால் அப்பகுதி மக்களிடம் பெட்ரோல் திருடிய வாலிபர்கள் மாட்டிக்கொண்டனர். பொதுமக்கள் பிடிபட்ட வாலிபர்களை வசமாக கவனித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மாட்டு இறைச்சியில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.