உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
விழுப்புரத்தில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
விழுப்புரம்,
நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று காலை வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் டி.மோகன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் கலந்துகொண்டு பணியின்போது உயிர்நீத்த போலீசாரின் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியின்போது பணிக்காலத்தில் உயிர்நீத்த போலீசார் மற்றும் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த காவல்துறையினருக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் வீரதீர செயல்களில் ஈடுபட்டும், நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டும் உயிரிழந்த போலீசார்கள் நினைவு கூரப்பட்டனர்.