குழந்தைகள் திருமணத்தை தடுக்க கடந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

குழந்தைகள் திருமணத்தை தடுக்க கடந்த ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2021-10-21 18:00 GMT
கிருஷ்ணகிரி:
குழந்தைகள் திருமணத்தை தடுக்க கடந்த ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆய்வு கூட்டம் 
கிருஷ்ணகிரி மாவட்டம் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைகள் சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இள வயது கர்ப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். சமூக நலன், மகளிர் உரிமை துறை இயக்குனர் ரத்னா வரவேற்றார். கூட்டத்தை இயக்குனர் வளர்மதி தொடங்கி வைத்தார். அரசின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் திட்டம் குறித்து விளக்கி பேசினார்.
இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 
நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கூடுதல் கவனம் 
இளவயது திருமணம் கொடுமையானது. இளவயது கர்ப்பம் தீங்கானது என்பதை நாட்டிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியை இங்கு தொடங்கி உள்ளோம். தமிழகத்தை பொறுத்தவரை தேனி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணம் என்பதும், கர்ப்பம் தரிப்பது என்பதும் கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் அலட்சியம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு 246 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு 830 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதன் சதவீதம் 2.8 ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது கடந்த 10 மாத காலத்தில் மட்டும் 728 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதன் சதவீதம் 3.1 ஆக இருக்கிறது. குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து குழந்தை திருமணம் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்தது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு இதுகுறித்தெல்லாம் கவலை இல்லை. இதுபற்றி அவர்களுக்கு யோசிக்க நேரமில்லை. 
அதனால் இதுகுறித்தான எந்த விஷயத்தையும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிட்டார்கள். ஆனால் இளவயது திருமணத்தை தடுக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக குட்கா கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
ஐஸ்கிரீம் பார்லருக்கு சீல் 
கோவையில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் ஐஸ்கிரீம் உடன் மதுவை கலந்து கொடுப்பதாக எனக்கு புகார் வந்தது. அதை மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் சாப்பிடுவதாக கூறினார்கள். அந்த ஐஸ்கிரீமை ஆய்வு செய்தபோது அதில் ஜின், ஒயின், பிராந்தி ஆகியவை கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இன்று காலை அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சீரழிவுகளை கண்டும், காணாமல் போகும் அரசு இந்த அரசல்ல. தவறு யார் செய்தாலும் அதைக் கண்டித்து தக்க நடவடிக்கை எடுக்கும். குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள், ஊராட்சி தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பயிற்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதில் செல்லக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக நல அலுவலர் பூங்குழலி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்