மதிமுக மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்

மதிமுக மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்

Update: 2021-10-21 17:15 GMT
கோவை

வைகோ மகனுக்கு பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. மாநில நிர்வாகி கட்சியில் இருந்து விலகியதுடன், தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளார். 

வைகோ மகன்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பதவி வழங்கப் பட்டு உள்ளதாக வைகோ அறிவித்தார். 

துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அதுதொடர்பான கடிதத்தை வைகோவுக்கு அவர் அனுப்பி உள்ளார். 

இது குறித்து ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜினாமா

கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப் பணித்து ம.தி.மு.க.வில் பணியாற்றி வந்தேன். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் மூலமும் சட்ட போராட்டத்தின் மூலமும் தொடர்ந்து போராடி உள்ளேன். 

அரசியலை எனது சுயலாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்பதை கொள்கை யாகவே வைத்து உள்ளேன். எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது என்று பொதுச்செயலாளர் வைகோ சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்று விட நினைத்து கடிதம் எழுதினேன். 

ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது. ஆனால் இன்று கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி கொள்கிறேன்.

வேறு யாருக்கும் தகுதி இல்லையா?

துரை வைகோ கட்சிக்கு வருவதால் எந்த தவறும் இல்லை. ஆனால் துரை வைகோ மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும். அவரை தவிர இந்த இயக்கத்தில் வேறு யாருக்கும் தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. 

கட்சியின் பொதுச்செயலாளர் விரும்பாத ஒரு விஷயத்தை அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானமாக நிறைவேற்றுகின்றனர் என்றால் கட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?. 

கட்சி தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று வைகோவே தெரிவிக்கின்றார். துரை வைகோவை எல்லோரும் மனப்பூர்வமாக ஏற்று கொண்டனர் என சொல்லமுடியாது. 

மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் 

ம.தி.மு.க.வில் ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்த திணிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சியில் அடுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது. துரை வைகோவை ஏற்று ஆதரிக்க வேண்டும் என்றனர். ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றேன். 

எனது சட்ட போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கம் அல்ல. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்