திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் குப்பை வாகனத்துடன் முற்றுகை
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் குப்பை வாகனத்துடன் வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் 400-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் தினமும் வீடுகளில் குப்பைகளை சேகரித்தல், குப்பைகளை வாகனங்களில் ஏற்றி உரப்பூங்காவுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஏராளமான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அப்போது குப்பைகள் ஏற்றப்பட்ட ஒரு வாகனத்தையும் கொண்டு வந்தனர். பின்னர் பணிச்சுமையை குறைக்க வேண்டும், தினசரி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் கடனுக்கான தவணை தொகையை கூட்டுறவு சங்கத்தில் செலுத்த வேண்டும். கடன் தொகையை முழுமையாக செலுத்திய பணியாளர்களுக்கு மீண்டும் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
மேலும் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் சமரசம் அடையாத பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அதிகாரிகள் மீண்டும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பணியாளர்கள் சமரசம் அடைந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.