பணியில் உயிரிழந்த போலீசாருக்கு 42 குண்டுகள் முழங்க மரியாதை
பணியில் உயிரிழந்த போலீசாருக்கு 42 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
நாட்டை பாதுகாக்க எல்லையில் 24 மணி நேரமும் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இரவு, பகலாக போலீசார் பணியாற்றுகின்றனர். இந்த பணியின் போது உயிரிழக்கும் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் போலீசாரின் உயிர் தியாகத்தை விளக்கும் வகையில் துப்பாக்கி, தலைக்கவசம் ஆகியவை நினைவு சின்னத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு 42 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மாவட்ட நீதிபதி ஜமுனா, கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, பழனி பட்டாலியன் போலீஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கமாண்டன்ட் அய்யாசாமி தலைமை தாங்கினார். துணை கமாண்டன்ட் மகேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 21 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பழனி அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.