வடுவூர்:-
செருமங்கலம் கொள்முதல் நிலையத்துக்கு ரூ.25 லட்சத்தில் நவீன நெல் உலர்த்தும் எந்திரம் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல் முறை
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே செருமங்கலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 டன் கொள்ளளவு கொண்ட நவீன தானியங்கி நெல் உலர்த்தும் எந்திரத்தை வழங்கி உள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த எந்திரம், இந்த நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சோதனை அடிப்படையில்...
இந்த நிலையில் நவீன உலர்த்தும் எந்திரம் மூலம் அரசு நிர்ணயிக்கும் ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. நவீன எந்திரத்தை டிராக்டர் மூலம் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வசதியும் உள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் இந்த எந்திரம் இயக்கப்பட்டு வருகிறது.