வாலிபர் பலி

காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2021-10-21 10:34 GMT
காங்கேயம்
காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து
காங்கேயத்தை அடுத்த  பாரவலசு, புதுக்காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் அஜித்குமார் வயது 21. இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி 26. இவர்கள் இருவரும் பால்வண்டியின் டிரைவராக வேலை செய்து வந்துள்ளனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேரும் வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் காங்கேயம்- சென்னிமலை சாலையில் உள்ள நால்ரோடு பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணி ஓட்டிச் சென்றார். அஜித்குமார் பின்னால் அமர்ந்து சென்றார். இரவு 8.45 மணியளவில் சாவடி பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
பலி
 இதில் பின்னால் உட்காந்திருந்த அஜித்குமார் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் இருந்த சுப்பிரமணியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கேயம் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்பிரமணி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்