ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்களை காரில் ஏற்றி கடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடையே மோதல். போலீசார் தடியடி
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
வாணியம்பாடி
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்த முயன்றதால் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தலைவர் பதவியை பிடிப்பதில் போட்டி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், 5 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் பா.ம.க.வும் வெற்றிபெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு தேவையான மெஜாரிட்டியை தி.மு.க. பெற்றுள்ளது. தலைவர் பதவியை பிடிப்பதில் தி.மு.க.வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தேவராஜ், தனது மருமகள் காயத்ரி பிரபாகரனை ஒன்றியக் குழுத் தலைவராக்க முயற்சி செய்து வருகிறார். அதே நேரத்தில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எம். முனிவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன் ஆகியோர் இணைந்து தி.மு.க.வைச் சேர்ந்த சங்கீதா பாரி என்பவரை தலைவராக்க முயற்சி செய்து வருகின்றனர்.
காரில் ஏற்ற முயற்சி
இந்த நிலையில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. பதவி ஏற்பு முடிந்ததும் 11.30 மணிக்கு உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.
அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த தி.மு.க.வை சேர்ந்த இரு தரப்பினரும் தங்கள் கார்களில் தி.மு.க. கவுன்சிலர்களை ஏற்ற முயன்றனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதேவேளையில் பதவியேற்று விட்டு வெளியே வந்த அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்களையும் காரில் கடத்த முயன்றனர்.
தி.மு.க.வினர் மோதல், போலீஸ் தடியடி
அப்போது அங்கு வந்த வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் ஆகியோர் அ.தி.மு.க. கவுன்சிலர்களை மீட்டு தங்களின் கார்களில் அழைத்துச்சென்றனர்.
தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலால் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராஜீ, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களை கலைக்க தடியடி நடத்தினர். இதனையடுத்து அனைவரும் சிதறி ஓடினர். பின்னர் இரு தரப்பினரும் தனித் தனியாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடக்கிறது. தி.மு.க. சார்பில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.