சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி பவுர்ணமியையொட்டி நெல்லையில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கும்ப பூஜை, சிறப்பு யாகம், அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதர் கோவில், நெல்லை அருகே உள்ள அருகன்குளத்தில் பழைய ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.