மாயமானதாக தேடப்பட்ட பள்ளி மாணவன் குளத்தில் பிணமாக மீட்பு
மாயமானதாக தேடப்பட்ட பள்ளி மாணவன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டான்.
மங்களூரு: மாயமானதாக தேடப்பட்ட பள்ளி மாணவன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டான்.
பள்ளி மாணவன் மாயம்
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேணூர் அருகே காசிபட்டணா கிராமத்தை சேர்ந்தவர் மார்ட்டின் பின்டூ(வயது 16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தந்தை மெல்வின் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மார்ட்டின் பின்டூ தனது நண்பர்களுடன் வெளியில் சென்றான்.
ஆனால் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தாய் ஹெலன், மார்ட்டின் பின்டூவை அக்கம்பக்கம், அவனது நண்பர்கள் வீட்டிற்கு சென்று தேடிபார்த்தார். ஆனால் எங்கு தேடியும் மார்ட்டின் பின்டூ கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெலன், மகன் மார்ட்டின் பின்டூ மாயமாகி விட்டதாகவும், தேடிகண்டுபிடித்து தரும்படி வேணூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மார்ட்டின் பின்டூவை தேடிவந்தனர்.
குளத்தில் பிணமாக மீட்பு
இந்த நிலையில் காசிபட்டணா கிராமம் அருகே உள்ள குளத்தில் மார்ட்டின் பின்டூ இறந்து பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் குளத்தில் மிதந்த மார்ட்டின் பின்டூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், மார்ட்டின் பின்டூ குளத்திற்கு சென்றபோது தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. இதுகுறித்து வேணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.