முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது ஏன்?; எடியூரப்பா விளக்கம்

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பதற்கு எடியூரப்பா விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2021-10-20 21:10 GMT
சிவமொக்கா: முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பதற்கு எடியூரப்பா விளக்கம் அளித்து உள்ளார். 

கட்சி மேலிடம் அழுத்தம்

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தீவிர ஆதரவாளரான பசவராஜ் பொம்மை தற்போது முதல்-மந்திரியாக பணியாற்றி வருகிறார். கட்சி மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். 

இதற்கிடையே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவை கட்சி மேலிடம் ஓரங்கட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவமொக்காவில் நேற்று எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் விளக்கம் அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

பா.ஜனதா கட்சியில் என்னை யாரும் புறக்கணிக்கவில்லை. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் என்னை தரக்குறைவாக நடத்தவில்லை. என்னை மிகுந்த மதிப்புடன் நடத்தி வருகின்றனர். என்னை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகின்றனர்.
நான் யாருடைய வற்புறுத்தலுக்கும் பணிந்து முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. 

கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே ராஜினாமா செய்தேன். சித்தராமையா தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இடைத்தேர்தலில் சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்