ராகுல் காந்தி குறித்து அவமரியாதையாக பேசக்கூடாது; பா.ஜனதாவினருக்கு, எடியூரப்பா வேண்டுகோள்

ராகுல் காந்தி குறித்து யாரும் அவமரியாதையாக பேசக்கூடாது என்று பா.ஜனதாவினருக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-20 21:10 GMT
பெங்களூரு: ராகுல் காந்தி குறித்து யாரும் அவமரியாதையாக பேசக்கூடாது என்று பா.ஜனதாவினருக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவமரியாதையாக பேசக்கூடாது

கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் நேற்று முன்தினம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், "ராகுல் காந்தி போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார். அவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி" என்றார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நளின்குமார் கட்டீல் பேச்சுக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சிந்தகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது மரியாதை உள்ளது. அவர் குறித்து யாரும் அவமரியாதையாக பேசக்கூடாது. அவ்வாறு பேசுவது சரியல்ல. சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். பற்றி தேவை இல்லாமல் விமர்சிக்கிறார்கள். இது சரியல்ல. ஆர்.எஸ்.எஸ்.-ஐ குறை கூறி பேசுவதால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. குமாரசாமி எப்போது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது. உண்மை நிலவரம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

விதவை பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1,200 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் வீடுகளில் அவர்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளது. வீடு இல்லாத அனைத்து குடும்பங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கி வீடுகள் கட்டி கொடுக்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழையால் இடிந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார். உலகமே போற்றும் தலைவராக மோடி திகழ்கிறார்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்