பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னக்காப்பு அலங்காரம்
பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மீன்சுருட்டி:
அன்னாபிஷேகம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்து பக்தர்களால் அன்னாபிஷேகம் தொடங்கப்பட்டது. இதில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று 100 மூட்டை பச்சரிசி சாதத்தை கோவில் வளாகத்திலேயே சமைத்து, அதனை 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட லிங்கத்திற்கு சாற்றப்பட்டு, மாலை 6.45 மணியளவில் ஐந்து அடுக்கு தீபங்கள் காட்டப்படும். பின்னர் இரவு 8 மணிக்கு மேல் லிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் அன்னாபிஷேகத்திற்கு பதிலாக சிவலிங்கத்திற்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று 37-வது அன்னாபிஷேக விழா நடந்தது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டு அன்னாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஆண்டும் அன்னக்காப்பு அலங்காரமே செய்யப்பட்டது.
அன்னக்காப்பு அலங்காரம்
இதையொட்டி நேற்று காலை கணக்க விநாயகருக்கு சந்தனம், மஞ்சள், பால், தயிர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு திரவியப்பொடி, மஞ்சள், திருநீறு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் கங்கை நீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு 5 அடுக்கு தீபாராதனை நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் 60 கிலோ பச்சரிசி கொண்டு குழைவாக சமைக்கப்பட்ட அன்னம் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, மலர்கள் மற்றும் பலகாரங்களால் அலங்கரித்தனர். மாலை 6.45 மணியளவில் ஐந்து அடுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிட்டால் நோய்கள் குணமாகி, குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
பக்தர்கள் தரிசனம்
அன்னாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை மூலம் பக்தர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி பகுதியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.