புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று ராதாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவரையும், அவர் வந்த மோட்டார் சைக்கிளையும் சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழ் பகுதியிலும் மற்றும் பெட்ரோல் டேங்கிற்குள்ளும் தலா 10 லிட்டர் கொண்ட 11 பாக்கெட்டுகளில் 110 லிட்டர் சாராயம், 80 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே விஸ்வரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பழனி மகன் சிவக்குமார் (வயது 42) என்பதும் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியில் இருந்து விழுப்புரத்திற்கு சாராய பாக்கெட்டுகளை நூதன முறையில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.