4 வழிச்சாலைக்காக வீடு, கடைகளை கையகப்படுத்தியதற்கு கூடுதல் நிவாரணம் கேட்டு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் பெரியப்பட்டில் பரபரப்பு

4 வழிச்சாலைக்காக வீடு, கடைகளை கையகப்படுத்தியதற்கு கூடுதல் நிவாரணம் கேட்டு பெரியப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-20 17:21 GMT
பரங்கிப்பேட்டை, 

தேசிய நெடுஞ்சாலை

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த 4 வழிச்சாலை, கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, கிழக்கு ராமாபுரம் உள்ளிட்ட 61 கிராமங்கள் வழியாக அமைய உள்ளது. இந்த 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணியில் மாவட்ட வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். பின்னர் கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. அந்த வகையில் புவனகிரி அருகே பெரியப்பட்டு கிராமத்தில் சாலை விரிவாக்கத்திற்காக கடைகள் மற்றும் வீடுகளை கையகப்படுத்தியதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என, அப்பகுதி வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இருப்பினும் கூடுதல் இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே 4 வழிச்சாலை விரிவாக்கத்திற்காக புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டில் கையகப்படுத்தப்பட்ட 150-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 300-க்கும் அதிகமான வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகள் கூறினர். இதனால் பாதிக்கப்பட்ட பெரியப்பட்டு வர்த்தக சங்கத்தினர் நேற்று அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக பெரியப்பட்டில் உள்ள கடை மற்றும் வீடுகளை கையகப்படுத்தி, அதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை. அதனால் எங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எங்களது கடைகள் மற்றும் வீடுகளை காலி செய்ய 6 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்