ஹெத்தையம்மன் கோவில்களை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர பொதுமக்கள் எதிர்ப்பு

ஹெத்தையம்மன் கோவில்களை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2021-10-20 14:36 GMT
கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவில்களை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோத்தகிரியில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஹெத்தையம்மன் கோவில்கள்

நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் தங்களது முன்னோர்களின் வீடுகளாக கருதி பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தி வரும் பேரகனி ஹெத்தைமனை, பெத்தளா ஹெத்தைமனை, கீழ் தாவனை ஹெத்தைமனை ஆகிய கோவில்களை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெத்தளா கிராமமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் கடந்த வாரம் ஹெத்தையம்மன் கோவில் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டம்

இதனை தொடர்ந்து நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில்  ஹெத்தையம்மன் கோவில்கள் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 49 கோவில்களை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் நீலகிரி மாவட்ட ஹெத்தைமனை பாதுகாப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலுசாமி, ஹெத்தைமனை பாதுகாப்பு குழு நிர்வாகி சாய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு கோவில்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகிறது. சிலைகள் காணாமல் போவது, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை நிகழ்கின்றன. 

மேலும் இந்து கலாசாரம், பண்பாடு சிதைக்கப்படுகிறது. எனவே இந்து கோவில்களை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குடை பிடித்தப்படி...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்பாட்டத்திற்கிடையே மழை கொட்டியது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்தப்படி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் இந்து முன்னணியினர், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த படுகர் சமுதாய பெண்கள் மற்றும் ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

இதையொட்டி குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், கோத்தகிரி இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சரவணகுமார் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்