லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் ரூ.4¾ லட்சம் சிக்கியது
சுகாதாரத்துறை துணை இயக்குனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4¾ லட்சம் சிக்கியது.
சென்னை,
காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 910, ஸ்ரீபெரும்புதூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளரான சீனிவாசனிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 490, காஞ்சீபுரம் வட்டார சுகாதார அலுவலரான இளங்கோவிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 300-ஐ கைப்பற்றினர். நேற்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனியின் வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 900-த்தை கைப்பற்றினர்.
மேலும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி மற்றும் இதர ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.