தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்

தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றவரை போலீசாா் கைது செய்தனா். சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-19 21:45 GMT
தாளவாடி
தாளவாடியை அடுத்த அருள்வாடி கிராமத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் அருள்வாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். 
சோதனையின் போது சரக்கு ஆட்டோவில் மூட்டை மூட்டையாக 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், ‘அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே உள்ள ஹம்சவாடி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 36) என்பதும், அருள்வாடி கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜேசை போலீசார் கைது செய்ததுடன், சரக்கு ஆட்டோ மற்றும் 1,200 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து மாவட்ட உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்