மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள தெற்கு அரியகுளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 55). வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தியாகராஜநகரில் உள்ள ஒரு வங்கி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சண்முகவேல் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகவேல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.