பணகுடி கன்னிமார் தோப்பில் தடுப்பணை கட்டப்படும் இடத்தை சபாநாயகர் ஆய்வு

பணகுடி கன்னிமார் தோப்பில் தடுப்பணை கட்டப்படும் இடங்களை சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2021-10-19 20:44 GMT
பணகுடி:
பணகுடிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மக்களுக்கு தினமும் 60 லட்சம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான உறை கிணறு அமைத்தல் மற்றும் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கன்னிமார் தோப்பில் தடுப்பணை கட்டுதல், பணகுடி குத்திர பாஞ்சான் அருவியை சுற்றுலாத்தலமாக  மாற்றுதல் மற்றும் வீடு இல்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் இடம் போன்றவற்றை சபாநாயகர் அப்பாவு மற்றும் ஞானதிரவியம் எம்.பி. ஆகியோர் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பணகுடி மனோ கல்லூரியின் அருகில் 4.25 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் 2 ஏக்கரில் நடைபயிற்சி பாதையுடன் கூடிய பூங்கா அமையும் இடங்களையும் பார்வையிட்டனர். தொடர்ந்து துறை ரீதியான என்ஜினீயர்களிடம் மாதிரி கட்டிட வரைபடத்தின் மூலம் விளக்கம் கேட்டறியப்பட்டது.

பேட்டி

பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
பணகுடி குத்திர பாஞ்சான் அருவியில் குளிக்க செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் சுற்றுலாதலமாக அதனை பயன்படுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் அதற்கு திடீரென தடை விதித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நான் நேரில் பேசி அதற்கு அனுமதி அளிக்கும்படி விளக்கி பேசினேன். 

அரசு விதிகளுக்கு உட்பட்டு விரைவில் குத்திரபாஞ்சான் அருவி பகுதி, கன்னிமார்தோப்பு பகுதிக்கு குற்றாலம் போல மக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வந்து செல்ல ஏற்பாடு செய்வதுடன் உடைமாற்றும் அறை, நடைபாதைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

பணகுடி பகுதி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தீர்வு காணாமல் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 60 லட்சம் குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே வீட்டு குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள அனைவருக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

வீடு இல்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற அதிகாரிகளை நேரடியாக சந்தித்து மனுக்களை கொடுக்க வேண்டும். யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் நீங்கள் கொடுக்கும் மனுக்கள் அனைத்துமே முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்