திருநள்ளாறு சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணம் தயாரித்து நில மோசடிக்கு உடந்தையாக இருந்த திருநள்ளாறு சார்பதிவாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால், அக்.20-
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த குமார் ஆனந்த் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை நாகை மாவட்டம் பொறையார் சிவன் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் (வயது 73), குமார் ஆனந்த் இறந்துவிட்டதாக போலி இறப்பு சான்றிதழ் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக குமார் ஆனந்த் நிலத்தை பராமரித்து வரும் குணசேகரன் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தேவராஜ், செருமா விளங்கை கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், நெடுங்காடு வடமட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (41) காரைக்காலை சேர்ந்த செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் (45) ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்தது தெரியவந்தது. இதை யடுத்து தேவராஜ், பாஸ்கரன், செய்யது முகமது முகைதீன் அப்துல் காதர் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக திருநள்ளாறு சார்பதிவாளர் ஜெயக்குமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.