திருட்டை தடுக்க கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு

தீபாவளியையொட்டி கோவையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால் திருட்டை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2021-10-19 17:01 GMT
கோவை

தீபாவளியையொட்டி கோவையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால் திருட்டை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தீபாவளி கூட்டம்

தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இதன்காரணமாக இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி சிலர் பொதுமக்களிடம் இருந்து பணம், நகைகளை திருடி வருகின்றனர். 

இதுபோன்ற நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு உள்ளன. 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கண்காணிப்பு கோபுரம்

தீபாவளி கூட்டம் காரணமாக ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் கூடுதலாக 40 போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

இதுதவிர ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் பகுதியில் கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோபுரத்தில் போலீசார் நின்றுக்கொண்டு பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர். 

விழிப்புணர்வு 

மேலும் பொதுமக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் திருடர்கள் குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடுவதை தடுக்க அந்தந்த போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 

மேலும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சந்தேக நபர்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்