ஆரம்ப சுகாதார நிலையங்களில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க நடவடிக்கை; இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உறுதி
ஆரம்ப சுகாதார நிலையங்களில் தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி ஆகிய கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகள், கும்பூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடை ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் சின்னாறு ஆற்றில் பாலம் அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உயர் கோபுர மின்விளக்குகளை இயக்கி வைத்தார். பின்னர் அவர், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, கொடைக்கானல் நகர செயலாளர் முகமது இப்ராகிம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் நீண்டகாலமாக வசிக்கிற மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. மேல்மலைப் பகுதியில், பல்வேறு கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடின்றி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இன்று (புதன்கிழமை) காலை நடைபெற உள்ள வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் பதவி ஏற்பு விழாவில் இ.பெ.செந்தில்குமார் பங்கேற்கிறார். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.