நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள் விழா-உருவப்படத்துக்கு அமைச்சர் மதிவேந்தன் மரியாதை

நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-19 16:46 GMT
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் 133-வது பிறந்த நாள் விழா நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நாமக்கல்லில் உள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதுடன், விழாவில் கலந்து கொண்ட நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கொள்ளு பேத்தி வித்யா சத்தியகிரிக்கு அமைச்சர் மதிவேந்தன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
பின்னர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறிப்புகளை பார்வையிட்டார். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கவிஞரின் வீரமுழக்க தேசப்பற்று பாடல்கள் இளைஞர்களால் பாடப்பட்டன. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) கோகுல், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் ரவி, நூலக வாசகர் வட்டத்தை சேர்ந்த மோகன், அன்புசெல்வன், அமல்ராஜ், நினைவு இல்ல நூலகர் செல்வம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்