தேனி நகரில் குப்பை மேடாக மாறிய குடியிருப்புகள்

தேனி நகரில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் குப்பைகள் அன்றாடம் அப்புறப்படுத்தப்படாமல் குப்பை மேடாக மாறியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

Update: 2021-10-19 14:48 GMT
தேனி :
தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் குப்பைகள் கொட்டப்பட்டன.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தேனி நகரை குப்பையில்லா நகரமாக மாற்றவும், மக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நகராட்சி நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு அங்கமாக குடியிருப்புகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டன. தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே குப்பைகளை வழங்குமாறும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தெருவெங்கும் குப்பைகள்
ஆனால் பொதுமக்களில் சிலர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் நிலையில் பலரும் பிரிக்காமல் அப்படியே வழங்கி வருகின்றனர். தூய்மை பணியாளர்களும் சேகரிக்கும் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரமும், காலியிடங்களிலும் கொட்டி வருகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அன்றாடம் அகற்றப்படுவது இல்லை. இதனால் தெருவெங்கும் குப்பை மேடாக மாறியுள்ளது.
பங்களாமேடு, பாரஸ்ட் ரோடு போன்ற இடங்களில் 100 மீட்டர் இடைவெளிக்கு ஒரு குப்பை மேடு உருவாகி உள்ளது. பங்களாமேடு திட்ட சாலையோரம் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் குடியிருப்புகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தேனி நகரில் குடியிருப்புகள் எங்கும் குப்பைகள் தேங்கி கிடப்பதை தவிர்க்கவும், குப்பைகளை அன்றாடம் முழுமையாக அப்புறப்படுத்தவும் நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்