கோட்டூர் அருகே பரிதாபம் வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு மனைவி படுகாயம்

கோட்டூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

Update: 2021-10-19 13:37 GMT
கோட்டூர்:-

கோட்டூர் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள 83 குலமாணிக்கம் ஊராட்சி தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் அருமைக்கண்ணு. இவருடைய வீட்டின் அருகில் கூரை வீட்டில் வசிப்பவர் மாரிமுத்து (வயது 80). விவசாய கூலித்தொழிலாளி.
இவருடைய மனைவி சுந்தரம்பாள்(65). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்களுடைய கூரை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து சாவு

இந்த நிலையில் அருமைக்கண்ணு வீட்டின் மண்சுவர் திடீரென இடிந்து மாரிமுத்துவின் கூரைவீட்டில் விழுந்ததில் மாரிமுத்து, சுந்தரம்பாள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி சுந்தரம்பாள் படுகாயங்களுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து களப்பால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
===

மேலும் செய்திகள்