கோவில்பட்டி பகுதி வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்
கோவில்பட்டி பகுதியில் மழை பெய்து வருவதை தொடர்ந்து வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
கோவில்பட்டி:
கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. கோவில்பட்டி பகுதியில் வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பரவலாக மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் நடவு செய்து வருகிறார்கள். பல இடங்களில் பயிர்களில் களை எடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் சுமார் 120 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். கடந்த மாதம் இரண்டு நாட்கள் பெய்த மழையில் மக்காச்சோள பயிர்கள் முளைத்து ஓர் அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. அவற்றுடன் போட்டி போட்டு களையும் வளர்ந்துள்ளது. எனவே களை வளர்ந்தால் மக்காச்சோளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நேற்று விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வாரம் மழை பெய்தால் மக்காசோள பயிர்கள் மேலும் செழித்து வளர்ந்து பலனளிக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள்.
சாத்தான்குளம்
சாத்தான்குளத்தில் நேற்று மாலை 4 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் வாறுகாலில் ஏற்பட்ட அடைப்புகளால் தெருக்களில் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து தாழ்வான பகுதிகளில் புகுந்தது.
எனவே வாய்க்கால்களை சுத்தம் செய்து அதில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் பேய்க்குளம், நொச்சிக்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.