தூத்துக்குடியில் உயர் மின்கோபுரத்தில் வாலிபர் பிணம்
தூத்துக்குடியில் உயர் மின்கோபுரத்தில் வாலிபர் பிணமாக தொங்கினார். இறந்தது எப்படி யார் அவர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உயர்அழுத்த மின்கோபுரத்தில் வாலிபர் பிணம் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்கோபுரத்தில் பிணம்
தூத்துக்குடி தேதாஜி நகர் காட்டுப்பகுதியில், சிலர் வேலைக்காக சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் இருந்து திடீரென சத்தம் கேட்டு உள்ளது. அங்கு சென்று பார்த்தபோது மின்சார கம்பியில் சிக்கி ஒருவரது உடல் தொங்கியபடி இருந்தது தெரியவந்தது.
அந்த பிணத்தை பார்த்த அந்த மக்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
மின்இணைப்பு துண்டிப்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மின்சாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் வந்தனர். 110 கிலோவாட் மின் திறன் கொண்ட உயர் அழுத்த மின் கோபுரம் என்பதால் சிப்காட் துணை மின் நிலையத்தில் மின் இணைப்பை துண்டிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு, தூத்துக்குடி சிப்காட் மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர்.
தற்கொலையா?
இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி வாலிபரின் உடலை கயிறு கட்டி கீழே இறக்கினர். உயிரிழந்தவருக்கு சுமார் 21 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக மின்சார கோபுரத்தில் ஏறினார், தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------------