போலி ஆவணம் மூலம் ரூ.10 லட்சம் நிலம் மோசடி; 3 பேர் கைது

போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் நிலத்தை மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-19 06:48 GMT
சென்னை,

சென்னை பெரம்பூர் முத்துக்குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவர், 1992-ம் ஆண்டு திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள பள்ளியரை குப்பம் கிராமம் ஐ.சி.எம்.ஆர். நகரில் 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனையை வாங்கினார். இதனை அவர் முறையாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

2008-ம் ஆண்டு செங்குன்றத்தைச் சேர்ந்த மற்றொரு மோகன் (வயது 50) என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோகனின் வீட்டுமனையை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து வேறொருவருக்கு விற்றுவிட்டார்.

இந்த மோசடி செயலுக்கு திருநின்றவூர் நடுகுத்தகையைச் சேர்ந்த வேலாயுதம் (49), திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு புஜ்ஜன் கண்டிகையை சேர்ந்த முனிரத்தினம் (49) ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் மோகன், திருவள்ளூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஹயாத்செரிப், குப்புசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மோகன், வேலாயுதம், முனிரத்தினம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்து விற்கப்பட்ட வீட்டு மனையின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்

மேலும் செய்திகள்