செங்குன்றம் பஸ் நிலையத்தில் பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருந்த கல்லூரி மாணவர்கள்

செங்குன்றம் பஸ் நிலையத்தில் பட்டாக்கத்திகளுடன் பதுங்கி இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-19 06:36 GMT
செங்குன்றம்,

செங்குன்றம் பஸ் நிலையத்தில் நேற்று பட்டாக்கத்திகளுடன் கல்லூரி மாணவர்கள் பதுங்கி இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் 4 மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

பிடிபட்ட மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், பெரம்பூர் திரு.வி.க. நகரைச் சேர்ந்த கேசவன்(வயது 19), செங்குன்றம் தீர்த்தங்கரையம்பட்டு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கலையரசன்(19) என்பதும், இவர்கள் மாநில கல்லூரியில் பி.ஏ. அரசியல் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இவர்களுக்கும், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அம்பேத்கர் கல்லூரி மாணவர்களை தீர்த்துக்கட்டுவதற்காக மாநில கல்லூரி மாணவர்கள் 6 பேர் கையில் பட்டா கத்திகளுடன் செங்குன்றம் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கைதான 2 மாணவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்