கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை; பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
பெங்களூருவில் ஏரி-கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் ஏரி-கால்வாய்களை ஆக்கிரமித்துள்ள கட்டுமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெரும் பாதிப்புகள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நகர்வலம் மேற்கொண்டார். குறிப்பாக பொம்மனஹள்ளி தொகுதியில் நேற்று அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர், அங்கு வசிக்கும் மக்களுடன் கலந்துரையாடினார். மடிவாளா ஏாியை சுற்றிலும் கட்டப்பட்டு வரும் கம்பி வேலியை அவர் பார்வையிட்டார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், ஏரி மற்றும் கால்வாய் நீர் வெளியேறி குடியிருப்பு கட்டிடங்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதை தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். பெங்களூரு மாநகராட்சி, மின்சார வினியோக நிறுவனம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றுடன் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
பிரச்சினை ஏற்படாது
சில இடங்களில் ராஜகால்வாயை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் மழை நீர் வெளியேறி குடியிருப்பு கட்டிடங்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி கால்வாய்களில் அதிகளவில் தூர் நிரம்பியுள்ளன. கால்வாய்களில் மழைநீர் தடையின்றி சென்று ஏரிகளை அடைந்தால், எந்த பிரச்சினையும் ஏற்படாது.
முதலில் தூர் வார வேண்டும். அதன் பிறகு கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மடிவாளா ஏரியின் நீளம், அகலம், ஆழம் அதிகரித்தால், அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தடுக்கப்படும். இந்த மடிவாளா ஏரியை சுற்றிலும் அமைக்கப்படும் கம்பி வேலி பணிகளை அடுத்த 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
அகர ஏரியில் தினமும் 30 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 20 கோடி லிட்டர் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. அதன் முழு திறனை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூருவில் மழை பெய்து வருவதால் சாலை குழிகளை மூட முடியவில்லை. மழை நின்றவுடன் இந்த குழிகளை மூடும் பணிகள் தொடங்கப்படும்.
சில கட்டுமான நிறுவனங்கள் ஏரி, கால்வாயை ஆக்கிரமித்துள்ளன. அத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த ஆய்வின்போது சதீஸ்ரெட்டி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.