இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காசி மகன் ராகுல்காந்தி (வயது 25), கூலி தொழிலாளியான இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராகுல்காந்தி, அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார்.
இந்நிலையில் கடந்த 7.12.2019 அன்று அந்த பெண், ராகுல்காந்தியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். பின்னர் மறுநாள் 8.12.2019 அன்று அந்த பெண், ராகுல்காந்தியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது தந்தை காசி, தாய் மலர்கொடி, சகோதரர் சிலம்பரசன் ஆகியோரிடம் தனக்கும் ராகுல்காந்திக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். அதற்கு காசி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
10 ஆண்டு சிறை
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல்காந்தி, காசி, மலர்கொடி, சிலம்பரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராகுல்காந்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். காசி, மலர்கொடி, சிலம்பரசன் ஆகிய 3 பேரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.