திருப்பத்தூரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’
திருப்பத்தூரில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் வாடகை பாக்கி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடைகளுக்கு சீல்
திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான 579 கடைகள் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, திருப்பத்தூர் பஸ் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளது. இந்த கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தக் கோரி நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கடைவைத்திருப்பவர்கள் வாடகை செலுத்த வில்லை. இதனால் நகராட்சி ஆணையாளர், ஏகராஜ் தலைமையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு நேரடியாக வந்து வாடகை செலுத்த கோரினார்.
அப்போது வாடகை செலுத்தாத கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறியதாவது:-
ரூ.3 கோடி பாக்கி
திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான பல கடைகாரர்கள் கடந்த 1½ வருடமாக வாடகை செலுத்தாமல் நகராட்சிக்கு ரூ.3 கோடி பாக்கி உள்ளது. இந்த வாடகையை வசூல் செய்யக்கோரி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்றும் வாடகை கேட்டும் கட்டாமல் இருந்த 12 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வாடகைதாரர்கள் உடனடியாக வாடகையை செலுத்தி நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்தார். மேலும் நாளை (புதன்கிழமை) முதல் வாடகை செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என கூறினார்.