அனுமதியின்றி கட்டப்பட்டதாக கட்டிடத்தின் மேல் பகுதி இடிப்பு

குளித்தலை அருகே அனுமதியின்றி கட்டப்பட்டதாக கட்டிடத்தின் மேல் பகுதியை இடித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-10-18 17:46 GMT
குளித்தலை
கட்டிடம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்ப்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் முறையான அனுமதியின்றி தனது வீட்டில் 3-வது, 4-வது தளம் கட்டி உள்ளதாகவும், இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் இம்மாதம் 20-ந் தேதிக்குள் கட்டிடம் இடிக்கப்படவேண்டுமென நீதிமன்றம் மூலம் அறிவுறுத்தப்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 
அதன்பேரில் குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணியன் நேற்று அனந்தபத்மநாபன் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் காவல்துறை, வருவாய்த்துறை மின்வாரியத் துறை உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். அவர்கள் அனந்தபத்மநாபன் கட்டியுள்ள வீட்டை பார்வையிட்டு அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் தகரத்தினால் அமைக்கப்பட்ட செட்டை இடித்து அப்புறப்படுத்தினர். 
அனுமதி வழங்கப்படவில்லை
அப்போது அதிகாரிகளிடம் அனந்தபத்மநாபன் கூறும்போது தான் முறைப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் 2 மாடிகள் கட்ட அனுமதி பெற்று கட்டிடம் கட்டியதாகவும், தொடர்ந்து கட்டிடத்தின் தளத்தை உயர்த்துவதற்காக அனுமதிக்க மனு அளித்ததாக கூறினார். 
அச்சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தால் தனக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிடத்தின் உயரத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை. என் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ள தானும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பரபரப்பு
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் பொய்யான தகவலை கொடுத்துள்ளனர். மேலும் கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் தன்னிடம் அளிக்காமல் அத்துமீறி தான் கட்டியுள்ள கட்டிடத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செட்டை இடித்தது கண்டிக்கத்தக்கது என்று அதிகாரியிடம் தனது கருத்தை முன்வைத்து எடுத்துக் கூறினார். 
இருப்பினும் தங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க உள்ளதாக தெரிவித்து அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்