தர்மபுரியில் நகை அடகு கடைக்காரர் வீட்டில் திருட்டு
தர்மபுரியில் நகை அடகு கடைக்காரர் வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரியில் நகை அடகு கடைக்காரர் வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருட்டு
தர்மபுரி வெண்ணாம்பட்டி விசுவநாத நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் அந்த பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவுகளில் போடப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிந்தது.
போலீசார் விசாரணை
திருடி செல்லப்பட்ட நகைகளில் அடகு வைக்கப்பட்டு இருந்த நகைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை திருடியது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து ஆனந்த் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.