வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் மூடைகள் பறிமுதல்
பாம்பனில் கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேசுவரம்,
பாம்பனில் கடலில் மிதந்து வந்த மஞ்சள் மூடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை
பாம்பன் பட்டாளத்தார் தெருவில் உள்ள ஒரு வீட்டை பாம்பன் காவல் நிலைய போலீசார் சோதனை செய்தனர். ஆளில்லாத அந்த வீட்டில் சுமார் 7 மூடைகளில் இருந்த 200 கிலோ மஞ்சளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் மஞ்சளை பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின் றனர். இதனிடையே பாம்பனில் இருந்து தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒரு நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தபோது நடுக் கடலில் மிதந்து வந்த 10 மூடை களை கைப்பற்றி கடலோர காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ரோந்து
மீனவர்கள் மூலம் ஒப்படைக்கப்பட்ட அந்த 10 மூடைகளையும் கடலோர போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் மஞ்சள் இருந்தது. ஒவ்வொரு மூடையிலும் சுமார் 30 கிலோ என மொத்தம் 300 கிலோ மஞ்சள் இருப்பதும் தெரியவந்தது. மூடைகளைப் பிரித்து பார்ப்பதில் அதிலும் மஞ்சள் இருப்பது தெரியவந்தது.
கடலில் மிதந்து வந்த இந்த மஞ்சள் மூடைகள் கடத்தல் காரர்கள் மூலம் படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்திச் செல்லும்போது இந்திய கடலோர காவல்படை அல்லது இலங்கை கடற்படை ரோந்து கப்பலை கண்டதும் கடலில் வீசி கடத்தல்காரர்கள் தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.