கள்ளத்தொடர்பை பெண்ணின் கணவரிடம் கூறியதால் ஆத்திரம் நண்பரை கொலை செய்த இறைச்சி கடைக்காரர் உள்பட 6 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
தேவதானப்பட்டி அருகே, கள்ளத்தொடர்பை பெண்ணின் கணவரிடம் கூறிய நண்பரை இறைச்சி கடைக்காரர் கொலை செய்தார். இதையடுத்து அவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஜகபர் சாதிக். அவருடைய மகன் முகமது ஹமீம் (வயது 21). கடந்த மாதம் 27-ந்தேதி இவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜகபர் சாதிக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹமீமை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் முகமது ஹமீம் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர், கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
சென்னையில் பதுங்கல்
இது தொடர்பாக பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில், தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே முகமது ஹமீமின் மோட்டார்சைக்கிளை தேவதானப்பட்டியை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த மோட்டார்சைக்கிளை கெங்குவார்பட்டியை சேர்ந்த இறைச்சி கடைக்காரர் ரபீக்ராஜாவிடம் இருந்து வாங்கியதாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் பதுங்கி இருந்த ரபீக்ராஜாவை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
காட்டிக்கொடுத்த மோட்டார் சைக்கிள்
விசாரணையில், கள்ளத்தொடர்பை பெண்ணின் கணவரிடம் கூறியதால் முகமது ஹமீமை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரபீக் ராஜா தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
கொலை செய்யப்பட்டவரின் மோட்டார் சைக்கிளை, மற்றொருவர் பயன்படுத்தியதன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்புத்துலக்கினர். அந்த மோட்டார் சைக்கிள் தான், கொலையாளிகளை காட்டி கொடுத்தது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:-
கெங்குவார்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவரின் மனைவி, ரபீக்ராஜாவின் இறைச்சி கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதுகுறித்து ரபீக்ராஜா, தனது நண்பரான முகமதுஹமீமிடம் கூறினார்.
இதையடுத்து முகமதுஹமீமுக்கு அந்த பெண்ணின் மீது ஆசை ஏற்பட்டது. மேலும் தனக்கு கிடைக்காதது, தன் நண்பருக்கு கிடைத்துவிட்டதே என்று பொறாமை அடைந்தார். இதனால் முகமதுஹமீம், ரபீக்ராஜாவின் கள்ளத்தொடர்பு குறித்து அந்த பெண்ணின் கணவரிடம் கூறினார்.
கத்தியால் குத்திக்கொலை
இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண், ரபீக்ராஜாவிடம் முகமது ஹமீம் தங்கள் 2 பேரையும் காட்டி கொடுத்தது குறித்து கூறினார். இதனால் ரபீக்ராஜா ஆத்திரம் அடைந்தார்.
மேலும் அவர், தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த ஆசிக் ரகுமான் (25) என்பவருடன் சேர்ந்து முகமது ஹமீமை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதையடுத்து சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் முகமது ஹமீமை அவரது மோட்டார்சைக்கிளில் கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு ரபீக்ராஜா, கத்தியால் முகமதுஹமீமை சரமாரியாக குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர்கள் இருவரும் அங்குள்ள கிணற்றில் முகமது ஹமீம் உடலை தூக்கி வீசி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
6 பேர் கைது
தேவதானப்பட்டிக்கு வந்த அவர்கள், அப்பகுதியை சேர்ந்த கருப்புசாமி (28), பின்னி பாண்டி (21), பாண்டீஸ்வரன் (23), ஷேக் பரீத் (28), தங்கப்பாண்டி (23) ஆகியோர் துணையுடன் முகமது ஹமீமின் மோட்டார்சைக்கிளை விற்றனர். இதைத்தொடர்ந்து ரபீக்ராஜா, ஆசிக் ரகுமான் ஆகியோர் சென்னைக்கு தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகு துப்புத்துலக்கி ரபீக்ராஜாவை கைது செய்து விட்டோம்.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ரபீக்ராஜாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிக் ரகுமான், கருப்புசாமி, பின்னி பாண்டி, பாண்டீஸ்வரன், ஷேக் பரீத் ஆகியோரை கைது செய்திருக்கிறோம். தங்கப்பாண்டியை வலைவீசி தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
இதனிடையே தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டினார்.