கோட்டூர் அருகே, குளங்களை ஏலம் விடும் விவகாரம் ஊராட்சி அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு

கோட்டூர் அருகே குளங்களை ஏலம் விடும் விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அவர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2021-10-18 16:51 GMT
கோட்டூர்:-

கோட்டூர் அருகே குளங்களை ஏலம் விடும் விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்துக்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக அவர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி ஊராட்சிக்கு உட்பட்ட நெருஞ்சினக்குடி கிராமத்தில் உள்ள வாணியன் குளம், பெருமாள் குளம், வெங்காய குட்டை, இடையன் குட்டை, திருவாசல் குளம் ஆகிய 5 குளங்களின் உரிமை தொடர்பான வழக்கு மன்னார்குடி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த குளங்களை ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக ஏலம் விடுவதை எதிர்த்தும், இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய ஆணையரை கண்டித்தும் கோட்டூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நெருஞ்சினக்குடி கிராம பொது நல கமிட்டி மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

போராட்டத்திற்கு நெருஞ்சினக்குடி கிராம பொது நல கமிட்டி தலைவர் மணி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, ஒன்றிய ஆணையர் சாந்தி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு

இதனிடையே இருள்நீக்கி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று குளம் ஏலம் நடந்தது. இதில் இருள்நீக்கி, சின்ன குருவாடி, வடசிராங்குடி, சோத்திரியம், இருள்நீக்கி கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏலத்தை நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஏலத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை பூட்டி விட்டு ஏலத்தை நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முடிவு எடுக்கப்படும்

இதுகுறித்து இருள்நீக்கி ஊராட்சி மன்ற தலைவர் செங்கொடி குமாரராஜா கூறியதாவது:-
நெருஞ்சினக்குடி குள பிரச்சினை ஒரு ஆண்டு காலமாக நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணாமல் குளங்களை ஏலம் விட கூறுவதும், பின்னர் ஏலத்தை நிறுத்துவதுமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். குள பிரச்சினைகள் குறித்து முன்பே தெரிந்திருந்தும் அதற்கு தீர்வு காணாத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். குளங்களை ஏலம் விடும் விவகாரத்தில் உரிய தீர்வு காணும் வரை ஊராட்சி அலுவலகத்தை திறக்க கூடாது என கூறி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை பூட்டி உள்ளனர். இதுதொடர்பாக 5 கிராம மக்களும் ஒன்றுகூடி பேசி உரிய முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

குளங்களை ஏலம் விடும் விவகாரம் தொடர்பாக சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும், ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்