பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.1,000 விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.1,000 விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

Update: 2021-10-18 15:39 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. 
இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். 
மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை வீழ்ச்சி அடைந்து ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. 
மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயார் செய்யப்படும் ஜவ்வரிசியை நவராத்திரி விழாவை முன்னிட்டு வியாபாரிகள் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் வாங்கி சென்றதால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது என கூறப்பட்டது.
 மேலும் தற்போது பிற மாநிலங்களுக்கு ஜவ்வரிசி ஏற்றுமதி குறைந்ததால் மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.1,000-ம் வரை குறைந்ததால் ‌மரவள்ளி‌க்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்