புதுச்சத்திரம் அருகே ஆடு திருட முயன்ற வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது

புதுச்சத்திரம் அருகே ஆடு திருட முயன்ற வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது

Update: 2021-10-18 15:39 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தோட்டக்கூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 46). விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து முத்துசாமி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் வீட்டிற்கு முன்பு கட்டியிருந்த ஆட்டை திருட முயற்சி செய்வது தெரியவந்தது.
இதையடுத்து முத்துசாமி திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ஆடுகளை திருட வந்த 3 பேரையும் மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் (23), குட்டுராம் (22), அனில்ராம் (24) என்பதும் அவர்கள் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்