மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்

ராமகுளம் கல்லாபுரம் வாய்க்காலில் சாய்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-18 13:19 GMT
தளி
ராமகுளம் கல்லாபுரம் வாய்க்காலில் சாய்ந்துள்ள  மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரங்கள்
அமராவதி சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் அமராவதி அணையை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்கு பிரதான கால்வாய், அமராவதிஆறு, ராமகுளம் கல்லாபுரம் வாய்க்கால் உதவி புரிந்து வருகிறது. இதில் பிரதான கால்வாயை தவிர மற்றவை மண் வாய்க்காலாகவே உள்ளது.
 அதன் கரையில் விவசாயிகள் இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு ஏதுவாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கால்வாயின் கரையின் இருபுறங்களிலும் ஏராளமான தைல மரங்கள் வளர்ந்து உள்ளது. இந்த மரங்கள் காற்று வேகமாக அடித்தாலோ அல்லது மழை பெய்தாலோ அடியோடு கீழே சாய்ந்து கால்வாய் மற்றும் பாதையை ஆக்கிரமித்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
வெட்டி அகற்ற வேண்டும்
கால்வாயின் கரையில் வளர்ந்துள்ள தைல மரங்கள் ஆங்காங்கே கீழே விழுந்து உள்ளது. அதை வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் கால்வாயில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி வருகிறது. அது மட்டுமின்றி மரம் வேருடன் சாய்ந்ததால் பாதையும் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்களுக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பயிர்களை பராமரிப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் விளைச்சலும் குன்றிவிடும் சூழல் உள்ளது.
எனவே ராமகுளம்- கல்லாபுரம் வாய்க்காலில் விழுந்துள்ள தைலமரங்களை வெட்டி அகற்றுவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும். அத்துடன் சேதமடைந்த பாதையை சீரமைத்து தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்